×

கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டின் 239 மருத்துவமனைகளுக்கு தேசிய தர சான்றிதழ்

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது, மகப்பேறு அறை மற்றும் கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் வழங்கும் விழாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது: தேசிய தர உறுதி தரநிலைகள் என்கின்ற வகையில் என்கியூஏஎஸ் என்று சொல்லப்படுகிற சான்றிதழ்கள் இந்திய அளவில் சிறப்பாக செயல்படுகிற மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து சான்றிதழ்கள் வழங்கும் பணி 2013-14ல் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த துறையைச் சேர்ந்த அலுவலர்கள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அயராது பாடுபட்டதன் விளைவாக கடந்த ஓராண்டில் மட்டும் 239 என்கியூஏஎஸ் தரச் சான்றிதழ்கள் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக பெறப்பட்ட ஒட்டுமொத்த சான்றிதழ்களின் எண்ணிக்கை 478. கடந்த ஆண்டு மட்டுமே பெறப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கை 239. அதாவது 50 சதவீத சான்றிதழ்களை ஓராண்டில் பெற்றிருக்கிறோம். லக்‌ஷயா என்கின்ற பெயரில் தொடர்ந்து 2017 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 43 சான்றிதழ்கள் பெறப்பட்டிருக்கிறது. 239 ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள், 43 லக்‌ஷயா விருது பெற்ற மருத்துவமனைகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்படவிருக்கிறது. ஏற்கெனவே எந்த மருத்துவ கட்டமைப்புகளை பொறுத்து விருதுகளை பெற்றிருக்கிறார்களோ, அந்த கட்டமைப்புகளை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு அந்த தொகை வழங்கப்படும்.

The post கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டின் 239 மருத்துவமனைகளுக்கு தேசிய தர சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu Government Pannoku Hospital ,Omanturar Government Estate, Chennai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...